இறைவன்: |
சௌந்தர ஈஸ்வரர் |
இறைவி: |
திருப்புரசுந்தரியம்மை |
தீர்த்தம்: |
காருண்யதீர்த்தம் |
பாடியோர்: |
அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 33 வது ஆலயம். சிவனை நோக்கி கடும் தவம் செய்த துர்வாச முனிவரின் தவத்தை கலைத்த கந்தர்வன் ஒருவனை நாரையாக சாபமிட்டார். கந்தர்வன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டும் முனிவர் மறுத்துவிட்டார். கந்தர்வன் இத்தலத்தில் உள்ள இறைவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம் தினமும் காசியில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்தால் சாபம் விலகும் என்று கூறினார். நாரை வடிவில் இருந்த கந்தர்வனும் அதி வேகத்தில் பறந்து தினமும் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்து சாபவிமோசனம் பெற்றான். ஆகையால் திருநாரையூர் என பெயர் பெற்றது.
திருமுறைகள் தொகுத்தவரும் தேவாரம் வெளிவர காரணமாய் இருந்தவருமான நம்பியாண்டர் நம்பிகள் பிறந்த ஊர். இவரின் பக்தியை மெச்சி இந்த கோயிலில் உள்ள பொல்லா பிள்ளையார் இவர் அளித்த உணவை நிஜமாக உண்டவர். இவரின் புகழை கேள்வி பட்டு ராஜராஜசோழன் நம்பியாண்டர் நம்பிகள் உதவியுடன் காணிக்கைகள், நைவேத்தியம் முதலியன பொல்லா பிள்ளயாருக்கு படைத்து திருமுறைகள் உள்ள இடம் காட்டியருள பிரார்த்தனை செய்தனர். தில்லை (சிதம்பரம்) ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கில் உள்ள மண்டபத்தில் கிடைக்கும் என தெய்வ வாக்கு கிடைத்தது. ராஜராஜசோழன், நம்பியாண்டர் நம்பிகள் இருவரும் சிதம்பரம் சென்று திருமுறைகளை மீட்டனர்.
இங்கு சங்கடகர சதுர்த்தி மிகவும் பிரசித்தம். இங்கு உள்ள பொல்ல பிள்ளையார் சன்னதி பிள்ளையாரின் ஆறாவது படை வீடு. சுயம்பு விநாயகர்.
தேவாரம்:
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் பேய் பாட நடமாடும் பித்தன் தன்னை மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானைக் கடலானை வனத்துளானை உறவானைப் பகையானை உயிரானானை உள்ளானைப் புறத்தானை ஓசையானை நறவாரும் பூங்கொன்றை சூடினானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இந்த தலம் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னர்குடி செல்லும் வழியில் 18 கி.மி தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு.
கோயில் முகவரி:
அருள்மிகு சௌந்தர ஈஸ்வரர் திருகோயில், திருநாரையூர் & அஞ்சல், லால்பேட்டை வழி, காட்டுமன்னர்குடி வட்டம், கடலூர் மாவட்டம். 608301.
தொலைபேசி:
முத்துகுமாரசாமி குருக்கள் – 04144 – 208879, 99432 54861