இறைவன்: |
பாடலீஸ்வரர், தோன்றதுணைநாதர் |
இறைவி: |
பெரியநாயகி, தோகைநாயகி |
தீர்த்தம்: |
கெடிலம் |
பாடியோர்: |
சம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 18 வது ஆலயம். உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்த்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.
திருநாவுக்கரசர் கரையேறிய கதை : திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் “கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே’ எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்’ என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் “கரையேறவிட்ட குப்பம்’ என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. இங்குதான் சம்பந்த பெருமான் திருநாவுக்கரசரை முதன் முதலில் அப்பர் என்று அழைத்த தலம்.
விநாயகர் கைகளில் பாதிரி மலர் கொத்துகள் உள்ளது இந்த தலத்தில் மட்டும் தான். இறைவியே இறைவனின் சன்னதியில் அமைந்து உள்ள பள்ளியறைக்கு தினமும் எழுந்து அருளுவதும் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு.
அகத்தியரும் அருணகிரிநாதரும், வியக்கிரபாதரும் வழிபட்ட தலம். இங்கு உள்ள இறைவனை வேண்டினால் கிடைக்கும் மனநிம்மதியால் உடலின் அனைத்து வியாதிகளும் நிவாரணம் பெறுகிறது.
தேவாரம்:
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் ஆயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்து கந்தான் மனத்து உள்ளிருக்க ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருபாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்களுக்கே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருப்பாதிரிபுலியூர் சென்னை – திருச்சி ரயில் பாதையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம். சென்னயிலிருந்து 200 கி.மீ. ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது.
கோயில் முகவரி:
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்,திருப்பாதிரிபுலியூர், கடலூர் 607002
தொலைபேசி:
நிர்வாக அதிகாரி 04142 – 236728