இறைவன்: |
அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர் |
இறைவி: |
உண்ணாமுலையம்மன், அபிதகுசாம்பாள் |
தீர்த்தம்: |
பிரம்ம தீர்த்தம் |
பாடியோர்: |
அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 22 வது ஆலயம். ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். விஷ்ணு அடியை காணமுடியவில்லை என்று உண்மை கூறினார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். ஆனால் பிரம்மா தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார். பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார். விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார். பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் இருவராலும் சோதியின் அடி, முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
பிருங்கி முனிவர் பார்வதியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.
திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். இதை பரணி தீபம் என்று கூறுவர் பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். . பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. லட்சகணக்கான மக்கள் தீப தரிசனம் கண்டு புண்ணியம் தேடுவர்.
இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார்.
கார்த்திகை மாதம் பௌர்ணமி கூடிய கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் மலையை சுற்றுவது சிறப்பு. சந்திரன், பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார். இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரகணக்கான மக்கள் கிரிவலம் வருகிறார்கள். இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். அருணகிரிநாதர் பிறந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். தற்கொலைக்கு முயன்றவரை முருகபெருமான் தடுத்து திருப்புகழ் பாட அருளினர். ரமண மகரிஷி இங்கு வாழ்ந்து ரமணாஸ்ரமம் அமைத்தார்.
இங்கு பெரும் யோகியாக வாழ்ந்த தெய்வமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் ராமேஸ்வரம் புனித யாத்திரை செல்லும்போது ராமநாதபுரம் ராஜா அவர்களின் வேண்டுகோளை ஏற்று ராமநாதபுர சமஸ்தானத்தின் ஐந்து கோயில் நிர்வாகத்தையும் ஏற்று, குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஒரு மடத்தையும் எற்படுத்தினார். இன்றளவும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் சைவ தொண்டு செய்து வருகிறார்கள்.
தேவாரம்:
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணமறுமே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருவண்ணாமலை சென்னையிலிருந்து 215 கி.மீ. தொலைவில் உள்ளது. மாவட்ட தலைநகர். அனைத்து வசதிகளும் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.00 – 12.30 மற்றும் மாலை 3.30 – 9.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். -606 601.
தொலைபேசி:
நிர்வாக அதிகாரி 04175 – 252438