இறைவன்: | பக்தஜனேஸ்வரர், திருநாவலீஸ்வரர் |
இறைவி: | சுந்தரநாயகியம்மை |
தீர்த்தம்: | கோமுகி தீர்த்தம், கருட நதி |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 8 வது ஆலயம். வாசுகி என்ற பாம்பின் நஞ்சை உண்டு, நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைத்தது. ஜம்புவனம் என்ற பெயரில் இறைவன் நான்கு யுகங்களுக்கு முன்பே இங்கு பிரதிஷ்டையாகி இருந்ததாக கூறப்படுகிறது. சுக்கிரன் ஸ்தாபித்து வணங்கிய லிங்கம் நவக்ரகளுங்கு நடுவே அமைந்து உள்ளது. இந்த லிங்கத்தை வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் இருந்தால் அது நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு தோழனான சுந்தரர் அவதரித்த தலம். இங்கு அவருக்கு சங்கிலியார் மற்றும் பரவையாருடன் தனி சன்னதி உள்ளது. பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் வழிபட்ட தலம்.
இங்கு உள்ள இறைவனுக்கு பக்தஜனேஸ்வரர் இறைவிக்கு மனோன்மணி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தில் வழிபட்டால் சுக்கிரதோஷம் விலகும். மனசுக்கு நிம்மதியும் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்குவர். இங்கு சூரிய பகவான் மேற்கு நோக்கி உள்ளார். வரதராஜபெருமாள் சன்னதியும் உண்டு. பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.
இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நிரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது. கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
தேவாரம்:
அஞ்சுங்கொண்டு ஆடுவர் ஆவினிற் சேவினை ஆட்சி கொண்டார்
தஞ்சங்கொண்டார் அடிச்சண்டியைத் தாமென வைத்து கந்தார்
நெஞ்சங்கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்தன ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பண்ருட்டியிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 607204.
தொலைபேசி:
வி. சம்பந்த குருக்கள், முத்து குருக்கள் (சுந்தர மூர்த்தி நாயனார் பரம்பரை): 04149 224391 94433 82945