அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் 
இறைவி: திருநிலைநாயகி 
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் 
பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 14 வது ஆலயம். ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீர்காழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் “தோணிபுரம்” என்றும் போற்றப்படுகிறது.

           மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர் தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீர்காழி பைரவருக்கு “சட்டை நாதர்‘ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

          காவிரியின் வடகரைத் தலங்களுள் சீர்காழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் “கழுமல வள நகர்” என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் “பிரம்ம புரம்” என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் “வேணுபுரம்” என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், “புகலி” என்றும், வியாழன் பூசித்ததால் “வெங்குரு” என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் “தோணிபுரம்” என்றும், ராகு பூசித்ததால் “சிரபுரம்” என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் “பூந்தராய்” என்றும், சிபி சக்ரவர்த்தி பேறு பெற்றதால் “புறவம்” என்றும், கண்ணன் பூஜித்ததால் “சண்பை” என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் “ஸ்ரீகாளிபுரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

          இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன. சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது. மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டைநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலை மீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார். இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர். விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, “சட்டை நாதர்‘ என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார். இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் திருஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

          திருஞானசம்மந்தர் தனது தந்தையுடன் சிறிய வயதில் சீர்காழி கோயிலுக்கு வந்தார். திருஞானசம்பந்தரை குளக்கரையில் நிற்க சொல்லிவிட்டு குளத்தில் நீராட மூழ்கியபோது தந்தையை காணாமல் அழுதபோது இறைவி பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் பால் கொடுத்தார். குளித்து முடித்து பார்த்தபொழுது வாயில் பாலுடன் நின்ற குழந்தையை பார்த்து பால் யார் குடுத்தது என்ற வினவ அவர் மேல வானத்தை காட்ட அங்கு இறைவன் இறைவியுடன் காட்சி தந்தார். இன்றும் இந்த நிகழ்ச்சி தருமை குரு மகா ஆதின சன்னிதானம் முன்னிலையில் ஆண்டுதோறும் திருமுலைப்பால் உத்சவம் என்ற பெயருடன் நடைபெறுகிறது.

          இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது. இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சீர்காழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய “திருக்கோலக்கா‘ என்னும் தலமும் அருகில் இருக்கின. திருஞானசம்பந்தர் தனது சிறிய வயதில் இறைவனை பற்றி பாடிய முதல் தேவாரம் இதுவாகும்.

தேவாரம்:   

தோடுடைய செவியன்விடை 
     யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் 
     உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் 
     தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய 
      பெம்மானிவ னன்றே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழி நகர மத்தியிலேயே இக்கோயில் உள்ளது.

தங்கும் வசதி:

சீர்காழியில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 1.00 மற்றும் மாலை 4.00 – 10.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் 609110.

தொலைபேசி:

04364 – 270235   –  94430 53195

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...