இறைவன்: | சப்தபுரீஸ்வரர், தாளபுரீஸ்வரர் |
இறைவி: | ஓசைகொடுத்தநாயகி |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 15 வது ஆலயம். பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கு சென்று தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதை பார்த்த சிவபெருமான் குழந்தையின் கைகள் வலிப்பதை பொறுக்கமாட்டாமல் இரண்டு பொன்தாளங்களை கொடுத்து அருளினார். தட்டிபார்த்தும் ஓசை வரவில்லை. உடனே தாளத்திற்கு ஓசை கொடுத்தார் இறைவி. ஆதலால் இந்த தலத்தில் இறைவனுக்கு தாளபுரீஸ்வர், இறைவிக்கு ஓசைகொடுத்தநாயகி என்றும் பெயர் வந்தது.
சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறார். இவற்றுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளனர். மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.
தேவாரம்:
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழி நகரத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகர பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
சீர்காழியில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609110.
தொலைபேசி:
ஞானசம்பந்தசிவாச்சாரியார் – 04364 274175, 9843011264