கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் ஜலகண்டேஸ்வரர் என்கின்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலமாகும். சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த லிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதால் ஜலகண்டேஸ்வரர் என்று திருநாமம் ஏற்பட்டது. சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் இருப்பவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கினால் தோஷ நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்வர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும்.
பலன்கள்:
ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வேலூர் நகரின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
தங்கும் வசதி:
வேலூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர் – 632 001.
தொலைபேசி:
98947 45768, 98946 82111