கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் மங்களநாதர் என்ற திருநாமத்துடன் அம்பாள் மங்களேஸ்வரியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ராவணனின் மனைவியான மண்டோதரி ஒரு சிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தாள். அவளுக்கு சிவன் காட்சியளித்து வரமளித்த தலம் இதுவேயாகும். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த இலந்தை மரம் இன்றளவும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும். ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பாகும். ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார். தாழம்பூவும் அவருடன் சாப விமோசனம் பெற்றது. இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருவது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும். இக்கோயிலை ஒரே நாளில் மூன்று வேலையும் தரிசிக்க வேண்டும்.
பலன்கள்:
சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
ராமநாதபுரத்திலிருந்து 18 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
ராமநாதபுரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ராமநாதபுரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை, ராமநாதபுரம் மாவட்டம் – 623 533.
தொலைபேசி:
04567 221 213, 94427 57691