கோயிலின் சிறப்புகள்:
ஒரு காலத்தில் இக்கோயிலில் கோதண்டராமர் சன்னதி மட்டுமே இருந்தது. ஒரு சமயம் ராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி அதனால் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி பிரசன்ன வெங்கடேசர் என்று பெயர் பெற்றார். இங்கு வேங்கடேசரை பிரதிஷ்டை செய்தபோது கூடவே அழகிய சிங்கர் விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே இக்கோயில் பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர் சிம்ம முகம் இல்லாமல் சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் அழகிய சிங்கர் என்று அழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு இவருக்கு பூஜை செய்யப்படுகிறது. இங்குள்ள ராமர் சன்னதியில் ஒரே நேரத்தில் ராமபிரானை திருமண கோலத்திலும் பட்டாபிஷேக கோலத்திலும் தரிசிப்பது சிறப்பாகும்.
பலன்கள்:
திருமண தோஷம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வேண்டி தோஷம் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னை சைதாபேட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. சைதாபேட்டைக்கு சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை- 600 015.
தொலைபேசி:
93811 63501