இறைவன்: | சங்காரண்யேஸ்வரர் |
இறைவி: | சௌதாரநாயகியம்மை |
தீர்த்தம்: | சங்கு தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 45 வது ஆலயம். பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி.
வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் அதிகாரநந்தி உள்ளது. வாயிலைக் கடந்ததும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மூலவர் சங்காரண்யேசுவரர் சன்னதிக்கு முன்பாக ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், கோச்செங்கணான், துவாரகணபதி உள்ளனர். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, ஜுரஹரர், ராமர், சீதை, வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். அருகே தனியாக துர்க்கை உள்ளார். பலிபீடம், நந்திக்கு இணையாக கோயிலின் இடப்புறம் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
சிறப்புலி நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. கபிலதேவ நாயனார் இத்தலம் பற்றிப் பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் இடம்பெறுகிறது. இத்தலத்தில் திருமால் வழிபட்டுப் பாஞ்ச சன்னியச் சங்கைப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. திருமால் சிவபெருமானைப் பூசித்துப் பாஞ்சசந்யம் என்னும் சங்கைப் பெற்ற தலம்.
தேவாரம்:
நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 7.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, ஆக்கூர் அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம் 609301.
தொலைபேசி:
04364 280757