இறைவன்: | சுவேதாரண்யேஸ்வரர் |
இறைவி: | பிரம்ம வித்யாம்பிகை |
தீர்த்தம்: | சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 11 வது ஆலயம். காசிக்கு இணையான ஆறு தலங்களில் இந்த தலமும் ஒன்று. இத்தலத்தில் மூர்த்தி, இறைவி, தீர்த்தம் தலவிருக்ஷம் எல்லாமே மூன்று. இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரஸ்வாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவருக்கு திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
திருவெண்காடு வடமொழியில் “சுவேதாரண்ய க்ஷேத்திரம்” என்றழைக்கப்படுகின்றது. வால்மீகி ராமாயணத்தில், “சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா“ (ஆரண்யகாண்டம் – ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்) “யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கர, தூஷண அரக்கர்களை ராமபிரான் வதம் செய்தார்.” என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக் குறிப்பிடுகின்றது.
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். இங்கு நடராஜர் சன்னதியில் ஸ்படிக லிங்கமும் ரகசியமும் உண்டு. 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம். புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
இங்குள்ள இறைவி ப்ரம்ம வித்யாம்பிகை திருவெண்காடரின் சக்தி வடிவம். இவள் மாதங்க முனிவரின் மகளாக அவதரித்து மாதங்கி என்ற பெயருடன் இறைவனை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்தாதல் பிரம்ம வித்யாம்பிகை என்ற பெயர் வந்தது. கல்வியில் சிறந்து விளங்க இந்த அம்மனை வாங்க வேண்டும்.
இங்குள்ள காளி சுவேதன காளி என்று அழைக்க படுகிறார். இங்குள்ள துர்க்கை மிகவும் அழகு. பிள்ளை இடுக்கி அம்மன்: திருஞானசம்பந்தர் இந்த ஊரின் வட எல்லையை மிதித்த பொழுது ஊர் எல்லாம் சிவலோகமாகவும் மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே இந்த ஊரில் கால் வைக்க அஞ்சி அம்மா என்று அழைத்தார். பெரியநாயகி இவரை இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்கு வந்தார். சமபந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பெரியநாயகி சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.
சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. நவக்கிரங்களில் புத பகவான் கல்வி, அறிவு, ஜோதிடம், இசை, கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை தரவல்லவர். இங்கு புதனுக்கு தனி சந்நிதி உள்ளது. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.
தேவாரம்:
கண் காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையாலும்
பெண்காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானை
பண்காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழி பூம்புகார் சாலையில் 15.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் நகர பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, மயிலாடுதுறை மாவட்டம் 609114.
தொலைபேசி:
04364 256424