இறைவன்: | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் |
இறைவி: | வாள்நெடுங்கண்ணி, கடகநேத்ரி |
தீர்த்தம்: | குமுததீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும். மாடக்கோயில் என்பது யானை ஏற முடியாதபடி படிக் கட்டுகள் வைத்துக் கட்டப்பெற்றதாகும். இத்தகைய கோயில்கள் கோச் செங்கணான் என்னும் சோழமன்னனால் கட்டப்பெற்றன என்பர். இறைவரின் திருப்பெயர் தான்தோன்றியப்பர். வடமொழியில் சுயம்புநாதர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் வாள்நெடுங்கண்ணியம்மை . வடமொழியில் கடக நேத்திரி. நாயன்மார்களுள் ஒருவராகிய சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. இத்தலத்து வேளாளர்களைத் சம்பந்தப்பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில், “வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாள ராக்கூரிற் றான்றோன்றி மாடமே” எனச் சிறப்பித்திருப்பது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும்.
மன்னன் கோச்செங்கண்ணனுக்கு வயிற்று வலி தீர மூன்று ஸ்தல விருக்ஷங்கள் உள்ள இடத்தில் கோயில் கட்டினால் வயிற்று வலி தீரும் என்று அறிந்து, ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வந்த பொழுது கொன்றை, பாக்கு, வில்வம் ஆகிய மூன்று ஸ்தல விருக்ஷங்களை இத்தலத்தில் கண்டு சிவன் கோயில் கட்டுகிறான். கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய கோயில் சுவர் மறுநாள் விழுந்துவிட கோயிலுக்கு பின்புறம் உள்ள பொய்யா பிள்ளையாரை வணங்க அவர் அந்தண வேடம் பூண்டு மன்னனிடம் என்ன பிரச்னை என்று வினவ மன்னன், சிவனுக்கு ஆலயம் கட்டவேண்டும் அனால் சுவர் இடிகிறது என்று கூறுகிறான். பிள்ளையார், காசிக்கு வீசம் அதிகம் உள்ள இக்குளத்தில் நீராடி ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார். மன்னனும் கோயில் கட்டி குடமுழுக்கு செய்கிறான். காசியை விட வீசம் அதிகம் புண்ணியம் தரும் தலம்.
தேவாரம்:
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோயில், ஆக்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609301.
தொலைபேசி:
N . A . N. வைத்தியநாத சிவாச்சாரியார் 04364 280005,
A . V. சுந்தரேசகுருக்கள் 9865809768