இறைவன்: | திருத்தளிநாதர், புத்தூரீசர் |
இறைவி: | சிவகாமி அம்மை |
தீர்த்தம்: | திருத்தளி தீர்த்தம் |
பாடியோர்: | அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவர் கொலை, கொள்ளை போன்ற பாவச் செயல்களில் ஈடுபட்டு வந்தார், தன்னை திருத்திக் கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்ட காலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்து இருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் “புற்றீஸ்வரர்’ எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இக்கோவில். புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் மரியாதைக்கு உரிய “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
இலக்குமி தேவி கடும் தவமிருந்து சிவபெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு களித்து பேறுபெற்ற திருத்தலம். அவர் சிவபெருமானிடம் வேண்டியவாறே இக்கோயில் தொடர்புடைய அனைத்தும் இலக்குமி சம்பந்தமுடையதாகவே விளங்கலாயிற்று. ஸ்ரீ இலக்குமி. ஆகவே கோயில் ஸ்ரீதளி, இறைவன் – ஸ்ரீ தளீஸ்வரர், தீர்த்தம் – ஸ்ரீ தளிதீர்த்தம் என வழங்கப்படுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்த அம்பகாசூரன் , சம்பகாசூரன் ஆகிய இருவரையும் வதம் செய்தார். இவரே பைரவரர் . இங்குள்ள பைரவர் சந்நிதி மிகவும் விசேஷமானது – தனிச் சிறப்பும் தனிச்சக்தியும் வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. தனிக்கோயிலாக அழகிய விமானத்துடன் அமைந்துள்ள இப்பைரவரின் சந்நிதியில் முன்மண்டபம் மருதுபாண்டிய சகோதரர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இருவரின் உருவங்களும் அம்மண்டபத்தில் உள்ளன. இங்குப் பைரவர் யோகாசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்திரன் மகன் சயந்தன் வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது.திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு – கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . இப்பைரவப் பெருமானுக்கு நாள் தோறும் அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பாநைவேத்தியம் நிவேதிக்கப்படுகிறது. “அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு மக்கள் யாரும் பைரவர் சந்நிதிக்குப் போக கூடாது. ஏற்கெனவே சென்றிருப்போரும் விரைந்து தரிசனம் முடித்துத் திரும்பி விடுவர். அர்த்தசாமத்தின்போது குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் மட்டுமே செல்வர். மற்றையோர் எவரும் வரக்கூடாது” என்பது இத்திருக்கோயிலில் இப்பைரவர் சந்நிதியில் தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகமாகும்.
நடராசசபை மிக அழகாகவுள்ளது. சுவரின் வெளிப்புறத்தில் வண்ணத்தில் பதஞ்சலி முதலானோர் உருவங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்குப் பெருமான் ஆடும் நடனம் கௌரிதாண்டவமாகும். இச்சபையில் வெளியில் உள்ள சிற்ப வேலைப்பாடுடைய ஐந்து கற்றூண்களும் இசைத் தூண்களாக அமைந்துள்ளன. சிற்பங்களைத் தட்டினால் மெல்லிய ஓசை எழுகின்றது. இத்திருக்கோயில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடாதிபதிகள் ஆளுகையில் உள்ளது.
தேவாரம்:
ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருப்பத்தூர் நகரத்திலேயே இக்கோயில் உள்ளது.
தங்கும் வசதி:
திருப்பத்தூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம் 630211.
தொலைபேசி:
93671 48201 , 98428 56647 , 9442047593