இறைவன்: | வைத்தியநாதசுவாமி |
இறைவி: | தையல்நாயகி |
தீர்த்தம்: | சித்தாமிர்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 16 வது ஆலயம். வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது. சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில் சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.
ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் நவக் கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.
திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணி நீக்க தொழுதிட்டார், இறைவன் அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதர் என்றழைக்க பெற்று வழிபடலாயினர். இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷிகள் ) இத்தலம் வந்து வணங்கிய செய்திகள் (ஐதிகங்கள்) உண்டு.
இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்ற பொழுது கழுகு மன்னன் சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ளஇடம் ஜடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது.
இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் மருத்துவ கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் செல்வ முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர். செல்வமுத்துகுமாரசாமி மிகவும் அற்புத தோற்றமுடையவர் . கார்த்திகை தினம் அன்று நடைபெறும் அபிஷேகம் காணக்கிடைக்காத ஒன்று. தருமை ஆதீனம் முன்னிலையில் நடைபெறும் கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும், சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது ஒமகுண்டத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) கரைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணி தீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர். ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் செல்வமுத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.
தேவாரம்:
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழி நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
வைத்தீஸ்வரன் கோயிலில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் 609117.
தொலைபேசி:
04364 279423