இறைவன்: | வீரட்டேஸ்வரர் |
இறைவி: | பெரியநாயகியம்மை |
தீர்த்தம்: | தென்பெண்ணை |
பாடியோர்: | சம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 11 வது ஆலயம். அட்ட விரட்ட தலங்களுள் ஒன்று. அந்தகாசுரனை வதம் செய்த தலம். சூரிய சந்திரர் ஆகிய இருவரையும் கண்களாக கொண்ட சிவனின் கண்களை ஒருமுறை பார்வதி விளையாட்டாக மூட உலகமே இருள் சூழ்ந்து அந்த இருளே அந்தகாசூரனாக மாறி இறைவனிடம் மோதுகிறது. இறைவனின் கதையால் பட்ட அடியால் மண்டை உடைந்து ரத்தம் பூமியில் விழுகிறது. அந்தகாசுரனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உருவாகி போர் தொடர்கிறது. பார்வதி காளியாக மாறி அந்தகாசுரனின் தலையிலிருந்து வரும் ரத்தத்தை கபாலத்தில் பிடித்து அசுர உற்பத்தியை தடுக்கிறார்கள். வெளிப்பட்ட ரத்தத்திலிருந்து 64 பைரவர்களையும் 64 பைரவிகளையும் உற்பத்தி செய்து தேவர்களுக்கு அருள் செய்கிறார்.
பாரிவள்ளல் தனது மகள்கள் அங்கவை,சங்கவை இருவரையும் அவ்வையார், கபிலர் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயிலூர் மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்த தலம். அவ்வையார் பொறுமையாக இங்கு உள்ள விநாயகரை “சீத களப “ என்று தொடங்கும் விநாயகர் அகவல் பாடிய திருத்தலம். இங்கு உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். முருகன் அசுரரை கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் நீங்க பூஜை செய்த இடம். இங்கு உள்ள அஷ்டபூஜ துர்க்கை அற்புதமான சக்தியுடன் நமது கண்களை போன்ற கண்களுடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு வழிபட்டால் பூர்வ ஜென்ம பாபங்கள் விலகும் புத்திர, பாப தோஷங்கள் விலகி மன நிம்மதி கிடைக்கும். இங்கு வழிபட்டால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். ராஜராஜசோழன் பிறந்த ஊர். கபிலர் உயிர் வாழ்ந்து உயிர் நீத்த இடம். திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. மங்கள சாசனம் பெற்ற திருவிக்ரமசுவாமி திரு தலம் ஊரின் நடுவில் உள்ளது.
தேவாரம்:
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்
எத்தை நான் பற்றி நிற்கேன் இருளற நோக்கமாட்டாக்
கொத்தையேன் செய்வதென்ன கோவல் வீரட்டனீரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருகோயில், கீழையூர், திருக்கோயிலூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 605707.
தொலைபேசி:
நிர்வாக அதிகாரி 04153-253532, 94862 80030,
சுவாமிநாதகுருக்கள் 04153-224036